பட்டா, சிட்டா, அடங்கல், கிரயம் என்றால் என்ன தெரியுமா?
சொத்துப் பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாகப் பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்துப் பரிமாற்றங்களை ஆவணப்படுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களைப் போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளைச் சரி செய்யும் வகையில், அடுத்தடுத்துப் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்குச் சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்துப் பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களைப் பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாகப் படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாகப் பயன்படுத்தி வரும் வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாகப் படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுத்துறையினர் தெரிவித்தனர். 23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....
No comments: