காசநோய் குறித்து பத்து பளிச் பதில்கள்
1.காசநோய் என்றால் என்ன?
'டி.பி., ' எனப்படும் காசநோய், ஒரு தொற்றுநோய். அது, 'மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' எனப்படும், பாக்டீரியாவால் உருவாகிறது. காசநோய் உள்ள நபரிடம் இருந்து, காற்றின் மூலம், இந்த நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது.
2.காசநோயின் பொதுவான அறிகுறிகள்?
மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் இருமல், சில வேளைகளில் ரத்தம் கலந்த சளி வெளியேறுதல், காய்ச்சல், குறிப்பாக இரவு நேரங்களில், எடை குறைவு, பசியின்மை போன்றவை. எச்.ஐ.வி., (எய்ட்ஸ் உண்டாக்கும் வைரஸ்) தாக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். அவர்களுக்கு துவக்கத்தில், காசநோய் தான் ஏற்படும். காரணம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். எச்.ஐ.வி., நோய் உள்ள நபருக்கு, 'டி.பி.,' கிருமி தொற்றும்போது, மற்ற நபர்களை விட, இவர்களில் இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு, ஆறு மடங்கு அதிகம்.
3.இதில் வகைகள் உள்ளதா?
இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, நுரையீரல் சம்பந்தப்பட்ட, காசநோய். மற்றொன்று, நுரையீரலுக்கு தொடர்பில்லாத, காசநோய் (எக்ஸ்ட்ரா பல்மோனரி டியூபர்குளோசிஸ்). இது, நுரையீரல் அல்லாத, மற்ற பகுதிகளில் ஏற்படும் காசநோயைக் குறிக்கிறது.
4.சிறுபிள்ளைகளுக்கு காசநோய் எளிதில் பரவும் அபாயம் உண்டாமே?
ஆம். காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் வசிக்கும் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும், மருத்துவ வசதிகள் குறைவாகவும், சுற்றுப்புறம் சுகாதாரமாக இல்லாத இடங்களில் வாழும் குழந்தைகளுக்கும் காசநோய் தொற்று, எளிதில் ஏற்பட்டுவிடும்.
5.காசநோய் இருப்பதை எப்படி கண்டறிவது?
காசநோயை கண்டுபிடிக்க, சளியில் காசநோய்க்கான கிருமி உள்ளதா என, தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பரிசோதிக்க வேண்டும். நன்றாக இருமிய பின் வரும் சளியை தான், பரிசோதனைக்கு தரவேண்டும். முக்கியமாக, சளிக்கு பதிலாக உமிழ்நீரை தரக்கூடாது. பரிசோதனைக்கு உமிழ்நீரை தந்தால் நோயை கண்டுபிடிக்க முடியாது.காசநோய்க்காக 'டாட்ஸ்' மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அளிக்கப்படும் சேவைகள் அனைத்தும், இலவசம்.
6.வீட்டு விலங்குகளாலும் காசநோய் பாதிப்பு ஏற்படுமா?
'மைக்கோ பாக்டீரியம்' கிருமி தாக்கியுள்ள விலங்கின் பால், இறைச்சியை உண்ணுவதாலும், நோயுற்ற விலங்கின் சுவாசம் நேரடியாக மனிதன் மீது படுவதாலும், அதன் நீர்த் திவலை மற்றும் சளித்திவலை மனித சுவாசத்திற்குள் செல்வதாலும், காசநோய் பரவும்.
7.காசநோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா?
காசநோய் எதிர்ப்பு மருந்துகளை, தொடர்ந்து முழு சிகிச்சை காலத்திற்கு எடுத்துக் கொண்டால், நோய் முழுமையாக குணமடையும். காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, குறைந்தபட்சம், ௬ மாதங்களுக்கு, தொடர்ச்சியாக மருந்து எடுத்து கொள்ள வேண்டும். முழுமையான அல்லது தொடர்ச்சியாக, சிகிச்சை எடுத்து கொள்ளாத நோயாளிகளுக்கு, இந்த நோய் உயிருக்கு ஆபத்தானதாகவோ அல்லது குணப்படுத்த முடியாததாகவோ மாறிவிடும்.
8.காசநோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பது எப்படி?
காச நோயாளி, வாயை மூடாமல் இருமினாலோ அல்லது தும்மினாலோ, எச்சில் துப்பினாலோ, அவர்களின் எச்சில் மூலம், காசநோய் பரவும். அதனால் நோயாளிகள் இருமும் போதும், தும்மும் போதும், முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். அங்கங்கே துப்பக்கூடாது. வீட்டில், மூடி உள்ள தொட்டியில் தான் துப்பவேண்டும்.
9.காச நோயாளிகள், எந்தமாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்?
காசநோயாளிகள் தங்களுக்கு பிடித்த எந்த வகை உணவையும் சாப்பிடலாம். குறிப்பிட்ட நபருக்கு பிரச்னை தரக்கூடிய எந்த உணவையும் தவிர்க்க வேண்டுமே தவிர, மற்றபடி ஊட்டச்சத்தான உணவுகளை உண்ண வேண்டும். காச நோயாளி, பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம் அல்லது மற்ற போதை தரக்கூடிய பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.
10. மன அழுத்தம் கூட, காசநோய்க்கு காரணமாகிறதாமே?
மன அழுத்தம் இருந்தாலே, ஒழுங்காக சாப்பிடத் தோன்றாது. முக்கியமாக நுண்ணுாட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் 'டி' பற்றாக்குறை இவை எல்லாமே சேர்ந்து, வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, காசநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
- வெங்கடேசன், குழந்தைகள் நல மருத்துவர்
98402 43833
- தினமலர் நாளிதழிலிருந்து
kaasa noi kuritthu kulandhaigal nala marutthuvar padhilgal, kulandhaigal kaasa noi,
No comments: