கணினியில் வைரஸ் தங்கும் இடங்கள்


பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கணினியில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்குள்ளாகவே சென்று, அங்கிருந்தே இயங்க ஆரம்பிக்கும். அதன் இயக்கத்தையும் முடக்கி வைக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த வைரஸ் புரோகிராம்கள் தங்கும் இடங்களை நம்மால், நாமாகவே தேடி அறிய முடியும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தேடுவதைக் காட்டிலும் நாமும் தேடி அவற்றை அறிந்து நீக்க முடியும். வாரம் ஒரு முறை இந்த தேடும் வேலையை மேற்கொண்டால், திடீரென வைரஸ் புரோகிராம்கள் தாக்கும் நிலை வராது. இதற்கு ஒரு முறை தேடி அறிய அதிக பட்சம் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். 10 நிமிடங்கள் இதற்கென செலவழித்தால், வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாமே. இதற்கு, வைரஸ் புரோகிராம்கள் எங்கெல்லாம் தங்கி இயங்கும் குணம் கொண்டவையாக உள்ளன என்று அறிந்திருப்பது நல்லது. அந்த இடங்களை இங்கு காணலாம்.

1.ஆட்/ரிமூவ் புரோகிராம் (Add/Remove Programs):

சிறிதும் தேவைப்படாத புரோகிராம்கள் என்று ஒரு வகை உள்ளன. இவற்றை PUPs அல்லது Potentially Unwanted Programs என அழைப்பார்கள். இந்த புரோகிராம்கள், வழக்கமான பயனுள்ள புரோகிராம்களுடன் தொற்றிக் கொண்டு நம் கம்ப்யூட்டர்களை வந்தடையும். இதற்குக் காரணம், நாம் தரவிறக்கம் செய்திடும் புரோகிராம்களை, அதற்கான நிறுவன இணைய தளத்திலிருந்து இல்லாமல், வேறு ஒரு இணைய தளத்திலிருந்து, அதே புரோகிராமினைத் தரவிறக்கம் செய்திருப்போம். அப்போது உடன் ஒட்டிக் கொண்டு சில புரோகிராம்கள் தரப்படும். இந்த புரோகிராமினை உடன் இணைத்து அனுப்ப, சில வேளைகளில், மூல புரோகிராம்களை வடிவமைத்தவர்கள் அனுமதி அளித்திருப்பார்கள். அவர்களுக்கு இணைக்கப்படும் புரோகிராம்கள் குறித்தும் அவை தரக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்தும் அறியாமல் இருப்பார்கள். இவற்றைக் கண்டுபிடித்து நீக்கிவிடலாம். இதற்கு Start மெனுவிலிருந்து, கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு Add/Remove Programs அல்லது Programs தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ப மாறுபடும். இந்த இரண்டும் இல்லை என்றால், Programs and Features என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அண்மைக் காலத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களைப் பட்டியலிடும். இந்த பட்டியலைப் பார்த்து, நமக்குத் தெரியாமல், கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்ட, தேவையற்ற புரோகிராம்களை நீக்கவும்.

2. பிரவுசர்களைச் சோதனை செய்க:

நம்மை அறியாமல் நாம் தவறான ஒரு லிங்க்கில் கிளிக் செய்திடுவதும், அறியாத சாப்ட்வேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுவதும், கெடுதல் விளைவிக்கும் பிரவுசர் ஆட் ஆன் புரோகிராம்களையும், ப்ளக் இன் புரோகிராம்களையும் உங்கள் கணினியில் பதிய வைக்கும். இவை, உங்கள் கணினியில் உள்ள தனிப்பட்ட தகவல்களைத் திருடும்; மற்றும் உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை மந்தப்படுத்தும். எனவே, உங்கள் பிரவுசரில் உள்ள ஆட் ஆன் புரோகிராம்கள் அனைத்தையும் அவை சரியானவை தானா? நீங்கள் அறிந்துதான் அவை உள்ளே பதியப்பட்டனவா என ஆய்வு செய்திடவும். தேவையற்றவற்றை உடனடியாக நீக்கவும். இவற்றைச் சில வேளைகளில் ஆட் / ரிமூவ் புரோகிராம்ஸ் பக்கம் வழியாக நீக்க வேண்டியதிருக்கும். பிரவுசர்களில் இவற்றை நீக்கும் வழிகளைப் பார்க்கலாம்.

குரோம்: பிரவுசர் விண்டோ ஒன்றைத் திறக்கவும். அதில் முகவரி கட்டத்தில் chrome://extensions என டைப் செய்து எண்டர் தட்டவும். தேவைப்படாத எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்க, அவற்றைத் தேர்ந்தெடுத்து, ட்ராஷ் ஐகானில் கிளிக் செய்திடவும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: பிரவுசரைத் திறக்கவும். வலது மேல் மூலையில் உள்ள கியர் ஐகான் மீது கிளிக் செய்திடவும். இனி Manage Add-ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இக்கு தேவைப்படாத ஆட் ஆன் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, Disable அல்லது Remove என்பதில் கிளிக் செய்திடவும். பயர்பாக்ஸ் பிரவுசரில், இதே போல பக்கம் ஒன்றைத் திறந்து about:addons என அட்ரஸ் பாரில் டைப் செய்து எண்டர் தட்டவும். தேவையற்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்து Remove என்பதில் கிளிக் செய்தால், அவை அன் இன்ஸ்டால் செய்யப்படும்.

3. இயக்கப்படும் சேவைகளும் இயக்க வழிகளும்:

சில வைரஸ் புரோகிராம்கள், மிகத் தந்திரமாக, நாம் காண இயலாதபடி ஒளிந்து கொண்டிருக்கும். நம் கணினியில் இயங்கும் சேவைகள் வழியாகத்தான் இவற்றை அறிய முடியும். நம் கம்ப்யூட்டர் இயங்கும் போது என்ன என்ன சேவைகள் நமக்கு, எந்த புரோகிராம்களினால், வழங்கப்படுகின்றன என்று Task Manager வழியாக அறியலாம். டாஸ்க் மானேஜரை இயக்க கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட் (Ctrl + Alt + Del ) கீகளை அழுத்தவும். இந்த விண்டோவில் கிடைக்கும் முதல் டேப் Processes என்று இருக்கும். இந்த பட்டியலைப் பார்க்கவும். இதில் நீங்கள் கண்டிராத சேவை உள்ளதா எனப் பார்க்கவும். இருப்பின் அவற்றை முதலில் நிறுத்திப் பார்த்து, பின்னர் அதன் மூல புரோகிராமினை நீக்கலாம். இவற்றை அறிய, சந்தேகப்படும் சேவையின் பெயரைத் தேடுதல் கட்டத்தில் அளித்து கண்டறியவும். இந்த விண்டோவில் அடுத்த முக்கியமான டேப் Services ஆகும். இதில் உள்ள description வரிசை, இந்த சேவையைப் பற்றிச் சுருக்கமாகக் கூறும். இங்கு காணப்படும் சேவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும், அவற்றின் சரியான பெயரைத் தேடி அறியவும். அல்லது ProcessLibrary or FileNet சென்று அதன் பெயருக்காகத் தேடலாம். எப்போது ஒன்றின் இயக்கம் அல்லது சேவை குறித்து நீங்கள் அறிகிறீர்களோ, அது பாதுகாப்பானதா இல்லையா என அறிவீர்கள். அல்லது அதனை எப்படி நிறுத்தலாம் என்பது குறித்தும் தெரியவரும். உடனே, அவற்றை வைத்துக் கொள்வதா இல்லையா என்ற முடிவு எடுத்து செயல்படலாம்.

4. ஸ்டார்ட் அப் சோதிக்க:

நம் கம்ப்யூட்டர் பூட் ஆகும்போது, பல புரோகிராம்கள், அதன் இயக்கத்திற்குத் துணை செய்திடும் வகையில், சில அடிப்படைச் செயல்பாடுகளைத் தருவதாகவும் திறக்கப்படும். கம்ப்யூட்டர் மூடப்படும் வரை, இவை பின்னணியில் இயங்கிக் கொண்டே இருக்கும். இந்த பட்டியலில், சில வைரஸ் புரோகிராம்கள் தங்களை இணைத்துக் கொள்ளும். இவற்றை msconfig என்ற டூல் மூலம் கண்டறிந்து முடக்கி வைக்கலாம். அல்லது புரோகிராமினைத் தெரிந்து கொண்டு, அவை இருக்கும் இடம் சென்று அழிக்கலாம். முதலில் இயக்கத்தினை முடக்கி வைத்து, கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். கம்ப்யூட்டர் இயங்கினால், அதனை நீக்கிவிடலாம். கம்ப்யூட்டர் இயங்க மறுத்தால், அல்லது அது குறித்து வேறு நோட்டிபிகேஷன் வந்தால், அதனை மீண்டும் தொடங்கும் புரோகிராம் பட்டியலில் இணைத்து இயக்க வைக்கலாம். உங்களிடம் விண்டோஸ் 7 அல்லது முந்தைய சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் இருந்தால், ஸ்டார்ட் மெனு திறந்து அதில் Run என்பதில் கிளிக் செய்திடவும். கட்டத்தில் msconfig.exe என டைப் செய்து ஓகே தட்டவும். இப்போது எம்.எஸ். கான்பிக் விண்டோ திறக்கப்படும். இங்கு உள்ள டேப்களில் ஸ்டார்ட் அப் (Startup) கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் புரோகிராம் பட்டியலில், தேவைப்படாத புரோகிராம் மீது ரைட் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் விளக்கத்தினைப் படிக்கவும். அதன் பின்னரும் அந்த புரோகிராம் தேவை இல்லை என முடிவு செய்தால், disable செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்குபவர்களுக்கு, எம்.எஸ். கான்பிக் விண்டோ சற்று வித்தியாசமாகக் கிடைக்கும். இருப்பினும் செயல்பாடு ஒரே விதமாகவே இருக்கும்.

கம்ப்யூட்டர் மலர்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...