போலீஸாரே செல்போனை திருடுவது தற்போது அம்பலமாகியுள்ளது..
போலீஸார் செய்யும் களவாணித் தனம் [cellphone thirudum police]..!
திருச்சி: ரயில்வே நிலையத்தில் போலீஸாரே பயணிகளின் செல் போனை திருடுவது தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த 14ஆம் தேதி இரவு மதுரையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், தனது வட இந்திய நண்பர் ரஞ்சித் சிங்குடன் சிவகாசி பாரதி நகரைச் சேர்ந்த கணேஷ் பாண்டி திருச்சி வந்திறங்கினார். நள்ளிரவில் பெரம்பலூர் செல்ல பேருந்துகள் இல்லை என்பதால், திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்பறையில் இரவு 1.15 மணிக்கு தனது சாம்சாங் கேலக்ஸி கிராண்ட் 2 மற்றும் இன்னொரு செல்போனையும் சார்ஜ் போட்டுள்ளார். கூடவே அவருடன் வந்த வடநாட்டு இளைஞர் தனது பவர் பேங்கையும் சார்ஜ் போட்டுள்ளார்.
அதன் பிறகு நடந்ததை நம்மிடம் விளக்கிய கணேஷ் பாண்டி, செல்போன்களை சார்ஜ் போட்ட பிறகு ரொம்ப அசதியாக இருந்துச்சு. அந்த அறையில் CCTV கேமரா இருப்பதை கவனிச்சிட்டு, கொஞ்சம் நம்பிக்கையோடு கண்ணசந்தோம். சரியாக 2 மணியிருக்கும் கண் விழித்து பார்த்த போது எங்க செல்போன், பவர் பேங்க் எதையும் காணவில்லை. என்னுடைய நம்பருக்கு போன் பண்ணி பார்த்தேன். சுவிட் ஆப் என வந்துச்சு. பிறகு பதறியடிச்சிக்கிட்டு ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் கிட்ட செல்போன் காணாமல் போனதை புகார் செய்தேன். அனைத்தையும் கேட்ட அவர் உடனடியாக திருச்சி ரயில்வே போலீஸில் புகார் கொடுக்க சொன்னார். அதன்படி நானும் புகார் செய்தேன். அங்கிருந்த எஸ்.ஐ சுவாமிநாதன் என்பவர், என்கிட்ட செல்போன் காணாமல் போனது குறித்து விசாரித்தார்.
"அங்க ஏன் தூங்குன...? தூங்கிட்டு அதை காணும் இதைக்காணும்னு கம்ப்ளைன்ட் பண்ணுவீங்க. இதுவே உங்களுக்கு வேலையா போச்சு...ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுங்க!" என சொல்லிக்கிட்டே, அந்த போன் எவ்வளவு, எப்ப வாங்கினீங்க என்று என்னிடம் விசாரித்தார். அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் அவர் மீதே எனக்கு சந்தேகத்தை வர வைத்தது. இந்த போலீஸ்காரங்களே எடுத்துக்கிட்டு நாடகம் ஆடுறாங்களான்னு நினைக்க தோணுச்சு.
சுதாரித்துக் கொண்டு உடனே சார்," நான் ஆம் ஆத்மி கட்சியின் பெரம்பலூர் ஒங்கிணைப்பாளராக இருக்கிறேன் அதுமட்டுமல்லாமல் எம்.எஸ்.சி., ஐடி படிச்சிருக்கிறேன். எனக்கு உடனடியாக அந்த அறையில் இருந்த 1.15 முதல் 2 மணிவரை பதிவான CCTV காட்சிகளை காட்டுங்க. எங்களுடைய செல்போனை திருடியவனுடைய அடையாளம் தெரிந்து கொண்டு நான் கோர்ட்டில் முறைப்படி பார்த்துக்கிறேன். இந்த பிரச்னையை என்ன செய்றதுன்னு தெரியும்" என்றேன். அதுக்கு அந்த எஸ்.ஐ, " அங்க சிசிடிவி எல்லாம் ஒர்க் ஆகல. அப்படி வீடியோ பதிவாகியிருந்தாலும் அதையெல்லாம் உங்ககிட்ட காட்ட முடியாது" ன்னு சொல்லி சமாளித்தார். விடாமல் நான் பிரச்னை பண்ணவே, நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின்னர், இரண்டு பெண் போலீஸை கூப்பிட்டு சிசிடிவி கேமிராவை பார்க்க சொன்னார்.
இது நடந்து கொண்டிருக்கும்போதே, என்னுடைய செல்போன் நம்பருக்கு ரஞ்சித் சிங்கின் நம்பரில் இருந்து போன் செய்த போது, அதுவரை சுவிட்ச் ஆப்பில் இருந்த என்னுடைய போன் நம்பர், திடீரென ரிங் ஆனது. அதில் பேசிய நபர், "உங்க போன் போலீஸ் ஸ்டேசன்லதான் இருக்கு. வந்து வாங்கிட்டு போங்க!" என்றார்.
உடனே போனை வாங்கிக்கிட்டு, மீண்டும் நான், "என்னுடைய செல்போனை திருடியவர்களை பார்க்கனும் அந்த சிசிடிவி வீடியோவை காட்டுங்கள்" என்றேன். "உங்க போன் கிடைச்சிருச்சி, அப்புறம் ஏன் பிரச்னை பண்ணுறீங்க. போங்க தம்பி..!" என்றார்கள். கடைசி வரை அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை காட்டவே இல்லை.
ஆனால் யூனிபார்மில் இல்லாத போலீஸ்காரர் ஒருவர், அருகிலிருக்கும் சில பேரிடம் "சொல்லாமல் எடுத்தது என் தவறுதான்!" என மன்னிப்பு கேட்டார். அங்கிருந்த காவலர்கள், "உங்க போனை திருடர்கள் எடுத்துக்கிட்டு போயிடக் கூடாதுன்னுதான் நாங்கள் எடுத்து வந்தோம். நீங்கள் கேட்கும் போது தந்துவிடுவோம்!" என்றெல்லாம் பேசி என்னை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள். பிறகு அந்த காத்திருப்பு அறைக்கு போய் அங்கிருந்த பயணிகளிடம், "இங்குள்ள காவலர்களிடம், ஜாக்கிரதையாய் இருங்கள்!" என்று சொல்லிவிட்டு வந்தேன். கடைசி வரை அந்த செல்போனை இவர்கள் எடுத்தார்களா, இல்லை திருடர்கள் துணையுடன் எடுத்தார்களா என தெரியவில்லை.
அங்கிருந்து வரும் போது என் வட இந்திய நண்பன், "கணேஷ்... உங்க ஊர்ல, போலீஸ்காரங்களே திருடுறாங்க. நீ இப்படி சண்டைபோடலைன்னா செல்போன் போயிருக்கும்ல என்றான்" என முடித்தார் காட்டமாக..
பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வந்துபோகும் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் போலீஸார் செய்யும் இந்த களவாணித்தனத்திலிருந்து மக்களை காப்பது யாரோ...?
கொஞ்சம் கவனமாக இருங்க மக்களே...!
-சி.ஆனந்தகுமார்
Source: vikatan.com
cellphone thirudum police, police steal mobile phones, awareness posts in tamil, Trichy railway station police fraud
No comments: