வருமானம் தரும் கோரை கிழங்கு களை

வருமானம் தரும் கோரை கிழங்கு களை [ Mooligai vivasayam: varumanam tharum Korai Kizhangu kalai ]

laabam tharum Korai kilangu mooligai, korai kilangu kalai varumaanam mooligai viavasayam seimurai
 
கோரையின் தாயகம் ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் ஆகும். கோரை என்பது உலகெங்கும் அதிகமாகக் காணப்படும் ஒரு களை ஆகும். இது உலகின் ""மிகவும் மோசமான களை'' என்று வல்லுநர்களால் வர்ணிக்கப்படுகிறது. உலகின் 92 நாடுகளில் இது மிகவும் பிரச்னைக்குரிய களையாகும். கரும்பு, நெல், காய்கறிகள் மற்றும் மக்காச்சோளம் போன்ற 50க்கும் மேற்பட்ட பயிர்களை மிகவும் பாதிக்கிறது.
 
ஆனால் கோரையின் கிழங்குகள் மருத்துவக் குணம் உடையதாகையால் மூலிகைக் கம்பெனிகளால் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. வியாபார ரீதியாக கோரைக்கிழங்கு நாகர்மோதா என அழைக்கப்படுகிறது.

விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள்
இதனுடைய வேர் மற்றத் தாவரங்களைப் பாதிக்கும் வேதிப் பொருளை வெளியிடுகிறது. கோரையானது சங்கிலித் தொடர் போன்று கிழங்குகளைத் தோற்றுவிப்பதால் முழுமையாக நீக்கம் செய்வது கடினம். களை நீக்கம் செய்யும் போதும் இதனுடைய உடைந்த வேர் பூமிக்குள் இருப்பதால் மீண்டும் வளரும். கிழங்குகள் வறட்சி மற்றும் பிற காரணிகளால் பாதிக்கப்படாது. களைக் கொல்லிகள் கோரையின் இலைப் பகுதியை மட்டுமே பாதிக்கும், கிழங்குகளையல்ல.

எனவே இத்தகைய பிரச்னைக்குரிய களையின் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் தரும் வழிகளைக் காண்போம்.
 
கோரையின் மருத்துவப் பயன்கள்:
பயன்படும் பகுதி: கிழங்கு கோரையின் கிழங்கு இந்திய மற்றும் சீன மருத்துவத்தில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிழங்குகளில் உள்ள சைபரோன் என்ற மருந்துப் பொருள் இதனுடைய மருத்துவக் குணத்திற்கு காரணமாகும். காய்ச்சல், செரிமானம், வயிற்றுப்போக்கு, வலி நிவாரணி, முடி வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதாவிடாய், நரம்புத் தளர்ச்சி போன்றவற்றிற்கு நிவாரணியாகப் பயன்படுகிறது. இரத்த அழுத்தத்தைச் சீராக்கும். பாகிஸ்தானில் வயிறு மற்றும் நரம்பு நோய்களுக்கும், சீனாவில் புற்றுநோயை குணப்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.
கோரையின் கிழங்குகள் மிகுந்த சத்துக்களை உடையது. ஆகையால் பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. ஆப்ரிக்காவில் பஞ்சம் ஏற்படும் காலங்களில் மக்கள் இதனையே உண்கின்றனர்.

சந்தை வாய்ப்பு: இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள ஏராளமான மூலிகை சார்ந்த மருந்து கம்பெனிகள் கொள்முதல் செய்கின்றன. மேலும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இதனை கொள்முதல் செய்கின்றன. இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டில் 158, 864க்கு ஈ மதிப்பிலான கோரைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து அதிக அளவில் கொள்முதல் செய்கிறது. மேலும் ஈரான், இலங்கை, அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்கின்றன. தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்ட மூலிகை சேகரிப்போரால் தரிசு நிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு மேற்கண்ட ஊர்களில் உள்ள மூலிகை வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர்.

கோரை கிழங்கு அறுவடை: கோரைக் கிழங்கானது ஈரம் மிகுந்த மற்றும் வறட்சியான தரிசு நிலங்களிலும் ஆண்டு முழுவதும் காணப்படும். எனினும் இதற்கான அறுவடைக் காலம் நவம்பர் - ஜனவரி ஆகும். கிழங்குகள் தோண்டப்பட்டு, கழுவி சூரிய ஒளியில் காய வைக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 வாரம் வரை காய வைத்தல் அவசியம் ஆகும். அதன் பின்பு கிழங்கினை ஒட்டியுள்ள முடி போன்ற நீட்சிகள் நெருப்பினில் பொசுக்கி நீக்க வேண்டும். பின்பு விற்பனைக்கு அனுப்பலாம். சாக்குகளில் நிரப்பும் முன்பு மண் மற்றும் மெல்லிய வேர் போன்ற கழிவுகள் நீக்கப்பட வேண்டும். கோரையில் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவு கிழங்குகளை உற்பத்தி செய்யும் பலவித கோரைகள் உள்ளன. சிறிய கிழங்குகளை உடைக்கும் போது வெள்ளை நிறத்திலும், பெரிய கிழங்குகளின் உட்பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மூலிகைக் கம்பெனிகள் பெரும்பாலும் சிறிய கிழங்குகளையே அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. எனவே கோரையும் வருமானம் தரும் களையேயாகும்.
- ந.கணபதிசாமி
திருமங்கலம், மதுரை.
 
laabam tharum Korai kilangu mooligai, korai kilangu kalai varumaanam mooligai viavasayam seimurai, korai kilangu aruvadai seiyum murai, nel vayal kalai, mooligai payiridum muraigal, Medicinal cultivation, Korai kizhangu or Cyperus rotundus medicinal properties in tamil 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...