சத்துணவில் பதநீர் தருமா அரசு


சத்துணவில் பதநீர் தருமா அரசு satthunavil padhaneer thara vendum tamilaga arasu

satthunavil padhaneer thara vendumபெருந்தலைவர் காமராஜர் 1956–ல் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்து குழந்தைகளுக்கும் 1982–ல் கொண்டு வந்த சத்துணவு திட்டம்தான், இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் தமிழ்நாடு பக்கம் திரும்பிப்பார்க்க வைத்து பின்பற்ற வைத்தது. இந்த திட்டம் மாணவர்கள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பசி, வறுமை காரணமாக பள்ளிக் கூடத்துக்கு செல்லாத நிலை தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்கியது. அடுத்து வந்த முதல்–அமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் இந்த திட்டத்துக்கு மேலும் சிறப்பு செய்தனர். தற்போது 68 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடுகிறார்கள்.

அனைத்து குழந்தைகளுக்கும் சூடான சமைத்த சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையுடன் அனைத்து பள்ளிக்கூட நாட்களிலும் வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று வேக வைத்த கருப்பு கொண்டைக் கடலை அல்லது பச்சைப்பயிறும், வெள்ளிக்கிழமையன்று வேகவைத்த உருளைக் கிழங்கும், முட்டை உண்ணாத குழந்தைகளுக்கு வாழைப்பழமும் வழங்கப்படுகிறது. இப்போது கலவை சாதம் வழங்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. 1965–ம் ஆண்டு ஏப்ரல் 29–ந் தேதி வேலூரில் அப்போது காதி மற்றும் கிராமத்தொழில்கள் வாரிய செயலாளராக இருந்த உயர் அதிகாரி வி.பத்மநாபன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 1966–1967–ம் கல்வி ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் மதிய உணவு சாப்பிடும் அனைத்து குழந்தைகளுக்கும் பதநீர் வழங்கப்படும். சென்னையில் உள்ள சில பள்ளிக்கூடங்களிலும், ராணிப்பேட்டையில் இளநிலை சீர்திருத்தப் பள்ளிக்கூடத்திலும் முதலில் சோதனை அடிப்படையில் வழங்கப்படும், பதநீர் உட்கொள்ளும் குழந்தைகளின் எடை அதிகரித்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து பதநீர் அருந்துவதால் சில கண் நோய்களும் குணமாகிறது என்று மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது என்று அப்போது கூறினார். தொடர்ந்து 1967–ல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் இந்த திட்டம் அப்படியே ஆழத்தில் போடப்பட்டுவிட்டது. உருவாகி 50 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக் கூறுகளை தமிழக அரசு ஆராய வேண்டும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால் அழிந்து வரும் பனைத்தொழிலுக்கும் உயிரூட்ட முடியும். எதற்குமே ஆசைப்படாத பெருந்தலைவர் காமராஜர்கூட விரும்பி அருந்துவது பதநீர்தான். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் 5 கோடி பனைமரங்களுக்கு மேல் இருந்தது. இப்போது 3 கோடிக்கும் கீழே போய்விட்டது. அதிக தண்ணீர் தேவையில்லாத எந்த இடத்திலும் வளரக்கூடிய பனைமரம் நட்டு 8 ஆண்டுகளில் பலன் கொடுக்க தொடங்கிவிடும். பனைமரத்தின் வேர் 10 அடிதான் செல்லும் என்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது. 8 அடிக்கு ஒருமரம் நடமுடியும். தமிழ்நாட்டில் உள்ள 39 ஆயிரம் ஏரி, குளங்களையும் தூர்வாரும்போது கரைகளில் பனைமரத்தை நடலாம். பனைமரத்தின் அனைத்து பொருட்களையும் பயன்படுத்த முடியும். குறிப்பாக பல சத்துக்களைக் கொண்ட பதநீர், கருப்பட்டியை சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கவேண்டும், அதற்கு உதவியாக மொத்தம் 10 கோடி பனைமர சாகுபடியை ஊக்குவிக்கவேண்டும் என்பதை அரசுக்கு ஆலோசனையாக சொல்லும் பணியை அனைத்து நிபுணர்களும், அரசியல் கட்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.

தினத்தந்தி

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...