மாணவர்கள் படிப்பதற்கு உகந்த நேரம் எது?
maanavargal padippadharkku ugandha sariyaana neram edhu..? மாணவர்கள் படிப்பதற்கு உகந்த நேரம் எது?
மாணவர்கள், தங்களின் பாடங்களைப் படிப்பதற்கு ஏற்ற நேரம் எது? என்பது குறித்து பலர் பல விதமான ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம். அதில் பெரும்பாலானோர், அதி காலை நேரமே படிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறியிருப்பார்கள். அப்போதுதான், மனம், எந்த சிந்தனைகளுமின்றி தூய்மையாக இருக்கும் மற்றும் சுறு சுறுப்பாகவும் இருக்கும் என்றும் அவர்கள் கூறியிருப்பார்கள்.ஆனால், இதற்கு, மாறுபட்ட கருத்தைக் கூறுவோர் அதிகம் உள்ளனர். அதிகாலையோ, இரவோ அல்லது மாலை நேரமோ, யாருக்கு எந்த நேரம் ஒத்து வருகிறதோ, அந்த நேரத்தில் படிப்பதே நல்லது என்பது தான் அவர்களின் கருத்து.
சிலருக்கு இரவில் விழிப்பது பிடிக்கலாம், சிலருக்கு அதிகாலையில் படிப்பது தான் பிடிக்கலாம், சிலருக்கோ, மாலை யில் தொடங்கி, இரவு 9 மணிக்குள் படித்து விடுவது பிடிக்கலாம். எனவே, அவரவர் மன நிலைதான் இந்த விஷயத்தில் முக்கியம்.
வாழ்வில் வெற்றியடைந்த பலரை, அவர்கள் எந்த நேரத்தில் படிப்பீர்கள் என்று கேட்கும் போது, அவர்களில் பெரும் பாலானோர் சொல்வது, இரவு நேரத்தைத்தான் என்பதை நாம் கவனிக்கலாம்.
இரவு நேரத்தைப் பொறுத்த வரை, ஒரு பெரிய நன்மை என்ன வெனில், அதீத அமைதி நிலவும் நேரமாக இரவு நேரம் இருக்கிறது. ஆனால், அதிகாலை நேரம் என்பது அப்படியல்ல. பால்காரர் சத்தம் தொடங்கி, வீட்டு வாசல்களை பெருக்கி, வாசல் தெளிக்கும் சத்தம் தொடங்கி, வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் சத்தம் தொடங்கி, பல விதமான சத்தங்கள் அதிகாலையில் தொடங்கி விடும். ஏனெனில், நம்மோடு சேர்ந்து, பலரும் அதிகாலையில் எழுவார்கள்.
ஆனால், இரவைப் பொறுத்தவரை, நாய்கள் குரைக்கும் சத்தம் வேண்டு மானால் எப்போதேனும் தொல்லை தரலாம். ஏதேனும் வாகனம் வரும் சத்தம் கேட்கலாம். மற்றபடி, நள்ளிரவை நெருங்க நெருங்க, அமைதி கூடிக்கொண்டே செல்லும். அதுதான், இரவுநேரப் படிப்பின் பலமே.
சிலரைப் பொறுத்தமட்டில், வெளியிலிருந்து வரும் இரைச்சல் குறித்து அதிகம் தொந்தரவையோ அல்லது இடைஞ்சலையோ உணர மாட்டார்கள். அவர்களது இல்லத்தில், இன்னொரு அறையில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும் சத்தம்கூட கேட்டுக் கொண்டிருக்கும் அல்லது பாட்டு ஓடிக் கொண்டிருக்கும் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பேசிக்
கொண்டிருக்கும் சத்தமோ கேட்கலாம்.
ஆனால், இவையெல்லாம் அவர்களுக்கு பெரிய தொந்தரவாகவே இருக்காது. படிக்கும் நேரம் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். இரவு 9 மணி, மிஞ்சிப்போனால் 10 மணிக்குள் அவர்கள் படிப்பை முடித்துவிடுவார்கள்.
இன்னும் சிலருக்கு, காலை உணவை அருந்திய பின்னர், படிக்கத் தொடங்கி, மதிய உணவிற்குள்ளான நேரத்திற்குள் படிக்க பிடிக்கும். ஏனெனில், மதியத்திற்கு மேல், தூக்கம் சொக்கும் என்பதால், மேற்கண்ட நேரத்தை தேர்ந்தெடுப்பார்கள்.
தமிழகத்தின் ஒரு அரசியல் பிரபலம், தனது இளமைக்கால வாழ்க்கைக் குறித்து ஒரு முறை தொலைக்காட்சியில் நீண்ட பேட்டியளித்தார். பள்ளிப் படிப்பில் முதலாவதாக வந்ததாய் கூறிய அந்த தலைவர், தனது படிக்கும் நேரம் குறித்து சொன்னது வித்தியாசமாய் இருந்தது.
அவர் சொன்னது இதுதான்;
"நான் தேர்வு நேரங்களில், மாலையில் வீட்டிற்கு வந்தவுடன், சாப்பிட்டு விட்டு, மாலை 5 மணிவாக்கிலேயே தூங்கி விடுவேன். இரவு 10 மணி வாக்கில் எழுந்து, அதிகாலை வரை தொடர்ந்து படிப்பேன். நான் பள்ளி தேர்வுகளில் முதல் மாணவனாக வந்தேன்" என்றார். அவரின் படிக்கும் நேர பழக்கம், பல மாணவர்களுக்கு ஆச்சர்யமானதாக இருக்கலாம்.
எனவே, மேற்கண்ட தகவல் களிலிருந்து மாணவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவை என்னவெனில், தங்களின் உடலுக்கும், மனதுக்கும், கவனமாய் ஒன்றிப் போய் படிப்பதற்கும் எந்தநேரம் உகந்ததாய் அமைகிறதோ, அந்த நேரத்தையே தேர்வு செய்து படிக்கவும்.
பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக, அதி காலை நேரத்தையோ, இரவு நேரத்தையோ அல்லது இன்னபிற பொழுதுகளையோ நீங்கள் தேர்வு செய்ய முயல வேண்டாம். ஏனெனில், அவரவர்க்கு ஒத்துவரும் நேரத்தையே, பெரும்பாலானோர் பரிந்துரைக்கிறார்கள்.
எனவே, மாணவர்களே, படிக்கும் நேரத்தை தேர்ந்தெடுப்பதென்பது, முற்றிலும் உங்களின் சவுகரியம் மற்றும் விருப்பம் சார்ந்தது. ஏனெனில், நீங்கள் எப்படி படிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமே தவிர, எந்த நேரத்தில் படிக்கிறீர்கள் என்பதல்ல முக்கியம்.
maanavargal padippadharkku ugandha sariyaana neram edhu..? மாணவர்கள் படிப்பதற்கு உகந்த நேரம் எது?, paadangalai padikka endha neram sirandhadhu, students when to study their lesson, Good time to read and learn, Education tips in tamil, students tips, kalvi malar, Students suggestions early morning time to study
No comments: